செய்தி விவரங்கள்

விடுதலைப் புலிகளுக்கு பயந்து ஜெயலலிதா போட்ட மனு !!!

விடுதலைப் புலிகளுக்கு பயந்து ஜெயலலிதா போட்ட மனு !!!

 


2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கிய தினம். இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இதில் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் மற்றவர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கினார்.

எனினும், அடுத்த ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக சிறப்பு அமர்வு உத்தரவிட்டது. இந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் கடந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான ஒரு சில சம்பவங்களை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில் விடுதலைப்புலிகளுக்கு பயந்து ஜெயலலிதா மனு போட்ட விடயமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2014 செப்டம்பர் மாதம் தொடங்கியதுமே பெங்களூருவில் சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை எல்லாம் முடிந்து, செப்டம்பர் 20ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிபதி குன்ஹா அறிவித்திருந்தார்.

இப்படியான சூழலில் “செப்டம்பர் 20ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும். அன்று குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்” என உத்தரவிடப்பட்டிருந்தது. இதில் ஜெயலலிதா திடீரென சிறப்பு நீதிமன்றத்திற்கு மனு ஒன்றை போட்டார்.

அதில், “முல்லைப் பெரியாறு, விடுதலைப் புலிகள் விவகாரம் ஆகியவற்றால் என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. சிறப்பு நீதிமன்றம் இயங்கும் இடத்தை பரப்பன அக்ரஹாரத்துக்கு மாற்ற வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜான் மைக்கல் குன்ஹா, “பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும். அதற்கு வசதியாக தீர்ப்பு திகதி செப்டம்பர் 27ஆம் திகதிக்கு மாற்றப்படுகிறது” என அறிவித்தார். அந்த வகையில், 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.