செய்தி விவரங்கள்

கடற்புலிகளை அழிப்பதற்காக பாஜக உதவியது !!!

கடற்புலிகளை அழிப்பதற்காக பாஜக உதவியது !!!

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளை அழிப்பதற்கு, இந்திய மத்திய அரசை, தற்போது ஆளும் பாரதீய ஜனதா கட்சியே உதவியதாக தமிழ்நாடு சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி இந்திய மத்திய அரசை ஆண்ட காலத்திலேயே, கடற்புலிகளை அழிப்பதற்கான உதவி இலங்கை அரசாங்கத்திற்கு செய்யப்பட்டதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

வாஜ்பாய் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்தொன்றை சுட்டிக்காட்டியே, மு.க.ஸ்டாலின் இதனைக் கூறியுள்ளார். அண்மையில் காலமான இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சென்றிருந்தார். அங்குள்ள இரங்கல் குறிப்பேட்டில் வாஜ்பாய் செய்த உதவி குறித்த குறிப்பொன்றை எழுதியுள்ளதாக, ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரபல ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளை ஒடுக்கி அழிப்பதற்கு இந்தியாவின் முன்னாள் பிரதமரான வாஜ்பாய் உதவியதாகவும், அவருடைய உதவி இல்லையென்றால் தம்மால் கடற்புலிகளை அழித்திருக்க முடியாது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்த இரங்கற் குறிப்பேட்டில் பதிந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்த வாஜ்பாய் இலங்கைக்கு ராணுவ ரீதியான உதவி மற்றும் பயிற்சிகளை அளித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எழுதியுள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவிக்கின்றது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் பல தமிழ் மக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியுமே பொறுப்பு என கூறி, சில நாட்களாக தமிழ்நாடு மாநிலத்தை ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரசாரம் செய்து வருகின்றது. இந்த பிரசாரத்திற்கு பதிலடியாகவே மு.க.ஸ்டாலினின் இந்த அறிக்கை அமைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈழத் தமிழர்களின் மீது, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், தாம் சார்ந்திருக்கும் பாரதீய ஜனதா கட்சியை எதிர்த்தே முதலில் போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

எனினும், பாரதீய ஜனதா கட்சியை தனது எஜமானராக கொண்டுள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால், அதற்கு எதிராகவே எப்படி எதிர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் இலங்கயின் வரலாறு தெரியாமல், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.