செய்தி விவரங்கள்

இலங்கையில் தங்க மழை - தேடியவர்களின் நிலை !!!

இலங்கையில் தங்க மழை - தேடியவர்களின் நிலை !!!

 

கிண்ணியா, கொழும்பு தம்பலகாமம் பிரதான வீதியில் நேற்று முன்தினம் வீசப்பட்ட தங்கத்தினை நேற்றும் சிலர் அப்பகுதியில் தேடி அலைந்து தங்கம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் குறித்த பகுதியினூடாக சென்ற வாகனத்தில் இருந்து ஒரு தொகை தங்கம் வீசப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தில் பயணித்த சிலர் வட்ட வடிவான, முத்து போன்ற, தங்க நிறத்தினாலான சிறிய பொருட்களை வீதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

வாகனத்திலிருந்து விழுந்த இந்த தங்க நிறத்தினாலான முத்துக்கள் மழைத்துளி போல் வீதியின் சகல இடங்களிலும் சிதறிக்காணப்பட்டன. இதை எடுத்த சில இளைஞர்கள் தங்கமா என்று பரிசோதிப்பதற்காக நகைக்கடைக்கு கொண்டு சென்ற போது அது தங்கம் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றும் ஒரு சிலர் அப்பகுதியில் வெகு நேரமாக தங்கத்தினைத் தேடி அலைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளிலும், ஏனைய வாகனங்களிலும் அப்பகுதிக்கு மக்கள் படையெடுத்து தங்கத்தினைத் தேடி வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்வாறு தங்கம் தேடிச் சென்றவர்கள் தங்கம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வெறும் கையோடு வீட்டுக்குச் சென்றுள்ளனர்.