செய்தி விவரங்கள்

பிரபாகரனின் செயற்பாடுகள் குறித்து கவலையடைந்த கருணாநிதி !!!

பிரபாகரனின் செயற்பாடுகள் குறித்து கவலையடைந்த கருணாநிதி !!!


விடுதலைப் புலிகள் மற்றும் அதன் தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகள் குறித்து தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தன்னிடம் கவலை வெளியிட்டிருந்ததாக மூத்த ஊடகவியலாளர் என். ராம் தெரிவித்துள்ளார். பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே மூத்த ஊடகவியலாளரும், தி இந்து குழுமத்தின் தலைவருமான என்.ராம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரனின் செயற்பாடுகள் குறித்து கவலையடைந்த கருணாநிதி !!!

தொடர்ந்தும் பேசிய அவர், “விடுதலை புலிகள் கருணாநிதியின் ஆட்சியைவிட எம்.ஜி.ஆர் இன் ஆட்சியை விரும்பியது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. எனினும், டெலோவின் தலைவர் சிறீ சபாரத்தினம் கொலை செய்யப்பட்டதிலிருந்து கருணாநிதிக்கு விடுதலை புலிகள் மீதிருந்த மரியாதை தகர்ந்தது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற போது தன்னால் முடிந்த அனைத்தையும் கருணாநிதி மேற்கொண்டிருந்தார். எனினும், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் கருணாநிதிக்கு எதிராகவே கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இலங்கை விடயங்கள் குறித்து அவருடன் நான் அதிகளவில் பேசியிருக்கின்றேன. ஆகையினால், அவர் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கொண்டவர் என என்னால் சொல்லமுடிகின்றது. அவர் வெளியில் ஈழத்துக்கு தீவிர ஆதரவு தருவதுபோல சொல்லி வந்தாலும் அவருடைய நிலை என்னவெனில், இலங்கைக்குள் தமிழர்கள் தங்களது அரசியல் உரிமைகளைப் பெற வேண்டும். தங்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் நிலை உருவாக வேண்டும்.

வேறு வழியில்லையென்றால், ஈழம் மலர வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. சிலர் பிடிவாதவே தமிழ் ஈழம் மட்டுமே வேண்டும் எனச் சொல்வது போன்றதோர் நிலை எடுப்பவராக அவர் இருந்ததில்லை. விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தவறுகள் குறித்து இருவரும் ஒருநாள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தவறு ஒன்றை என்னிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

“சிறீ சபாரத்தினம் என்னுடைய சகோதரர் மாதிரியானவர். அவரை கைது செய்து கொல்லப்போகிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். அதைச் செய்யக்கூடாது என நான் சொல்வதாய் பிரபாகரனிடம் சொல்லுங்கள் என பேபி சுப்ரமணியத்திடம் பேசினேன். எனினும், சபாரத்தினத்தை சித்திரவதை செய்து படுகொலை செய்தனர். இதனால் விடுதலைபுலிகள் மீது பெரும் ஏமாற்றம் உண்டானது” என்று சொல்லி கருணாநிதி என்னிடம் கவலைப்பட்டார்.

இதேவேளை, இலங்கையில் இறுதிக் கட்ட போரில் யாரும் விடுதலை புலிகளையும், பிரபாகரனையும் காப்பாற்ற முடியாது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், பிரபாகரன் அசட்டையாக ஓர் நிலையை எடுத்துவிட்டார். அந்த நேரத்தில் பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது என்பதே உண்மை. அந்நேரத்தில் இந்தியா தலையிடும் என பிரபாகரனுக்கு யாரோ நம்பிக்கை அளித்ததாக கேள்விப்பட்டோம். ஆனால் ஆதாரமில்லை. இந்த நிலையில், திமுகவால் மட்டும் காப்பாற்றியிருக்க முடியுமா என்ற கேள்வியே தேவையற்றது.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.