செய்தி விவரங்கள்

பொலிஸாரின் வேலையை இலகுவாக்கிய வயோதிபப் பெண் - சுன்னாகத்தில் சம்பவம் !!!

பொலிஸாரின் வேலையை இலகுவாக்கிய வயோதிபப் பெண் - சுன்னாகத்தில் சம்பவம் !!!

 

சுன்னாகம் சூறாவத்தை பகுதியில் வீதியால் சென்ற பெண்மணியின் தங்கச் சங்கிலியை அறுக்க முயன்ற திருடனுடன் போராடி தனது தங்கச் சங்கிலியை மீட்டதோடு குறித்த பெண்ணின் சாதுரியத்தால் கொள்ளையர்களும் இனங் காணப்பட்டனர்.

சூறாவத்தைப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் 60 வயதுப் பெண்மணி ஒருவர் வீதியால் நடந்து சென்றுள்ளார். குறித்த சமயம் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இரு இளைஞர்கள் பெண்மணியின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளனர். இதன்போது சங்கிலியை பறிகொடுத்த 60 வயது பெண்மணி உடனடியாகவே சுதாகரித்துக்கொண்டு கொள்ளையனை மடக்கிப் பிடிக்க முயன்றதோடு கூக்குரல் எழுப்பியுள்ளார்.

இதன் காரணமாக கொள்ளையன் தப்பியோட வேண்டிய நிலமை ஏற்பட்டது. இருப்பினும் தங்கச் சங்கிலியை மீட்ட பெண்மணி திருடனையும் மடக்கிப் பிடிக்கவே முயன்றார். இதன்போது திருட முயன்றவரின் கைத் தொலைபேசி மீட்கப்பட்டது.

இந்த நிலையில் வீதியால் பயணித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் பெண்மணியை அழைத்துச் சென்று சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்ததோடு திருட்டில் ஈடுபட்ட நபரின் கைத் தொலைபேசியினையும் ஒப்படைத்தனர்.அதே சமயம் அந்நபரின் கைத் தொலைபேசிக்கு அவரது நண்பர் ஒருவர் அழைப்பை மேற்கொண்டார்.

இதன்போது தமிழ்ப் பொலிசார் ஒருவர் சாதுரியமாக உரையாடி நண்பரை இனம்கண்டுகொண்டனர். அதன் பின்னர் நண்பரை அழைத்து விசாரைணை மேற் கொண்ட போது திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரும் இனங் காணப்பட்டார். குறித்த பெண்மணியின் துணிச்சல் மிகு காரியத்தினால் திருடனை ஒரே நாளில் இனங்காணும் அளவிற்குச் செயல்பட்ட பெண்மணியை பிரதேச மக்கள் பாராட்டியுள்ளனர்.