செய்தி விவரங்கள்

அரசாங்கமே கண்டு அஞ்சும் ஒரே மனிதன் !!!

அரசாங்கமே கண்டு அஞ்சும் ஒரே மனிதன் !!!

 

கூட்டு எதிர்க்கட்சி தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவே நிறுத்தப்பட வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,கோத்தபாய ராஜபக்ச மீது பொய்யான குற்றவியல் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்த முடியுமா என்பது குறித்து பேராசிரியர் மெக்ஸ்வல் பரணகமவுடன் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் சிலர் கலந்துரையாடியது உண்மையே. அமெரிக்க தூதரகத்தின் அதிகாரிகள், வெள்ளை கொடி சம்பவம் அல்லது வேறு சம்பவம் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச மீது ஏதாவது குற்றச்சாட்டை முன்வைக்க முடியுமா என்பது குறித்து மெக்ஸ்வல் பரணகமவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதனை தவிர அரசசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியம், அமெரிக்க தூதரகத்திற்கு சென்று, கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளனர். கோத்தபாய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்து கொள்வதை தடுக்க வழியுள்ளதா என கேட்டுள்ளனர். கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுத்தால் மட்டுமே தமது திட்டங்களுக்கு எதிர்காலம் இருக்கும் என இவர்கள், அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

அரசாங்கம் பதவிக்கு வந்த காலத்தில் இருந்தே கோத்தபாய மீது அச்சம் கொண்டுள்ளது. அரசாங்கம் பதவிக்கு வந்ததுடன் அவன்கார்ட் கப்பல் ஒன்றை பிடித்து அதன் மூலம் கோத்தபாய ராஜபக்சவை சிறையில் அடைக்க முயற்சித்தது. மிக் விமான கொடுக்கல், வாங்கல்கள் எனக் கூறி மற்றுமொரு வழக்கில் சிறையில் அடைக்க முயற்சித்தது. இந்த முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை.

அடுத்ததாக டி.ஏ. ராஜபக்ச நினைவிடத்தை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி, சிறையில் அடைக்க முயற்சித்தது. அரசாங்கம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கோத்தபாய ராஜபக்சவை கண்டு அஞ்சுகின்றன என்பதால், கோத்தபாயவே உகந்த ஜனாதிபதி வேட்பாளராக இருப்பார். இவ்வாறு அனைத்து தரப்பினரும் கோத்தபாய ராஜபக்ச தொடர்பில் அச்சம் கொண்டிருப்பதால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் மாத்திரமே வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.