செய்தி விவரங்கள்

புதிய அரசியல் அமைப்பு மஹிந்த குடும்பத்தை இலக்கு வைத்தா ???

புதிய அரசியல் அமைப்பு மஹிந்த குடும்பத்தை இலக்கு வைத்தா ???

 

தற்போதைய அரசாங்கம் ஒவ்வொரு நபர்களை இலக்கு வைத்து அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலக்கு வைத்து அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்வதால் தான் அரசியல் அமைப்பு, உருவாக்கம் செய்யப்படாத மருத்துவமாகவே காணப்படுகின்றது. எனது குடும்பத்தை இலக்கு வைத்தே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுகின்றது. இன்று நாட்டில் அதிகாரபூர்வமற்ற எதிர்க்கட்சியாக செயற்பட்டு வரும் கூட்டு எதிர்க்கட்சியை குறைத்து மதிப்பீடு செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் எனக்கு 58 லட்சம் வாக்குகள் கிடைக்கப் பெற்றது. பின்னர் அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கூட்டு எதிர்க்கட்சிக்கு உள்ள செல்வாக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு குடும்பத்தை பழிவாங்குவதற்காக அரசியல் அமைப்பில் பல்வேறு சரத்துக்களை உள்ளடக்கும் நோக்கில் அரசியல் அமைப்பினை உருவாக்குவது பிழையான முன்னுதாரணமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் எவ்வாறான சரத்துக்களை அரசியல் அமைப்பில் கொண்டு வந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சியின் வேட்பாளரே நிச்சயம் வெற்றியீட்டுவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.