செய்தி விவரங்கள்

குத்துக்கரணம் அடித்த மகிந்த !!!

குத்துக்கரணம் அடித்த மகிந்த !!!

 

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தனது மகன் நாமல் ராஜபக்ச போட்டியிடுவதற்கு வயது போதவில்லை என்று, இந்திய ஊடகங்களுக்கு தாம் கூறியதாக சிறிலங்கா ஊடங்கள் பொய்யான செய்தியை வெளியிட்டதாக கூறியிருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச. அண்மைய இந்தியப் பயணம் தொடர்பாக, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதுபற்றி கூறியுள்ளார்.

நாமல் ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, வயது போதாது என்று மகிந்த ராஜபக்ச கூறியிருந்த கருத்தை முன்வைத்து, வயது போதுமானதாக இருந்திருந்தால், அவரே அதிபர் வேட்பாளர் என்று கூற முற்படுகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்குப் பதிலளித்துள்ள மகிந்த ராஜபக்ச,”நாமலுக்கு 35 வயது பூர்த்தியாகாததால், அவர் அதிபர் தேர்தலில் களமிறங்க முடியாது என்று நான் இந்திய ஊடகங்களிடம் கூறியதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அது முற்றிலும் பொய்.

உங்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவாரா என்று இந்திய ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். எனது சகோதரர்கள் போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று நான் பதிலளித்திருந்தேன். கட்டாயமாக எனது சகோதரர்களைக் களமிறக்குவேன் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. இந்திய ஊடகங்களிடம் நான் கூறிய கருத்து இங்குள்ள சில ஊடகங்களும், சமூக ஊடகங்களும், திரித்து வெளியிட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மகிந்த ராஜபக்ச ‘தி ஹிந்து’ நாளிதழுக்கு அளித்திருந்த செவ்வியின் கடைசி கேள்விக்குப் பதிலளித்த போது, “எனது மகன் ( நாமல் ராஜபக்ச) அதிபர் வேட்பாளராக முடியாது. அவர்கள் குறைந்தபட்ச வயதெல்லையை, 30 இல் இருந்து இப்போது 35 ஆக அதிகரித்திருக்கிறார்கள். எனவே 2019இல் அவரைக் கருத்தில் கொள்ள முடியாது.

எனது சகோதரர் நிச்சயம் ஒரு போட்டியாளராக இருப்பார். ஆனால், கட்சி மற்றும் கூட்டணி தான் யார் என்பதை முடிவு செய்யும்” என்று மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார். மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பரான சுப்ரமணியன் சுவாமியின் மகளான சுஹாசினி ஹைதரே, மகிந்த ராஜபக்சவை ‘தி ஹிந்து’ நாளிதழுக்காக செவ்வி கண்டிருந்தார் என்பதும், அந்தச் செவ்விக்கு அவர் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.