செய்தி விவரங்கள்

இன்று திடீரென ஜனாதிபதியை சந்தித்த கூட்டமைப்பு !

ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கலந்தாலோசித்து தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழு ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளதாக தெரியவருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம்ஏ.சுமந்திரன் ஆகியோர் இன்று ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இதன்போது நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பில் மிக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலிருந்து மேற்படி விடயம் தெரியவருகிறது. அதில் மேலும்,

இந்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதி, சில முடிவுகள் எடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினருக்கு விளக்கமளித்தார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கான காரணங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் ஜனாதிபதிக்கு எடுத்து கூறினார்கள்.

இந்த தீர்மானங்கள் ஏற்கனவே பகிரங்கமாக முழு நாட்டிற்கும், உலகிற்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

தாம் ஏற்கனவே எடுத்த தீர்மானங்களை மாற்ற முடியாது என்றும், அந்த தீர்மானங்களின் படியே தாம் செயற்படுவோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதிக்கு விளக்கி கூறினார்கள்.

அனைத்து கட்சிகளினுடைய இணக்கப்பாட்டோடு நாட்டின் அரசியல் சூழ்நிலையை சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவரோடு கலந்தாலோசித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை கொடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழு குறிப்பாக ஜனாதிபதிக்கு உறுதியளித்தது.

இந்த நிலையை விரைவாக அடைவதற்கு தற்போது யோசித்துள்ள திகதிக்கு முன்னதான ஒரு திகதியில் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென்று ஜனாதிபதிக்கு த.தே.கூ வலியுறுத்தியது. இவ்வேண்டுகோளை தான் கவனமாக ஆராய்வதாக ஜனாதிபதி உறுதியளித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.