செய்தி விவரங்கள்

மஹிந்தவிற்கு ஆதரவளிப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை!

மஹிந்த தரப்பிற்கு ஆதரவளிப்பதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவிற்கு ஆதரவளிப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை!

அலரி மாளிகையில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், கலாச்சார அடிப்படையில் நான் மஹிந்த ராஜபக்சவை சென்று சந்தித்து வந்தேன். அதற்காக அவருக்கு ஆதரவளிப்பதாக அர்த்தப்படாது. கட்சித் தாவுதலோ அல்லது கட்சிக்கு எதிராக செல்வதோ அப்படியான செயற்பாடுகளில்
நான் ஈடுபடவில்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

சில ஊடகங்கள் நான் கட்சித் தாவியதாக செய்திகளை வெளியிட்டிருந்தன. அதனை நான் திருத்தவே இந்த கருத்தை முன் வைக்கின்றேன்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நான் இருப்பேன். கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு கட்டுப்பட்டு நடப்பேன். எனக்கு எதிராக போலி செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்.நான் மஹிந்தவை சந்திக்க சென்றிருந்த போது மூன்று கட்சியின் தலைவர்கள் சென்றிருந்தார்கள். ஏன் அவர்கள் பற்றிய செய்திகள் வெளிவருவதில்லை.

சிறுபான்மையின சிறிய அரசியல்வாதி என்பதனால் எனக்கு எதிராக சேறுபூசப்படுகின்றது. நாங்கள் குற்றம் செய்யவில்லை எனக்கு கட்சியில் பெரிய பிரச்சினை வந்தது. நான் கட்சியை விட்டு விலகவில்லை. நன்றி பாராட்டும் வகையிலேயே மஹிந்தவை சந்தித்தேன். இதனை பிழையாக அர்த்தப்படுத்தி செய்தி வெளியிட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.